தனியார் பள்ளி வாகனங்கள் நாளை தணிக்கை

ஈரோடு, ஜன. 3:ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பதை ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, நடப்பாண்டு ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் நாளை(4ம் தேதி) தணிக்கை செய்யப்பட உள்ளது. இந்த வாகன தணிக்கையானது, ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏஇடி பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

இதில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட பகுதியில் 83 தனியார் பள்ளி வாகனமும், மேற்கு பகுதியில் 300 பள்ளி வாகனமும், பெருந்துறை பகுதியில் 400 வாகனம் என மொத்தம் 783 தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த தணிக்கை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில், வட்டார போக்குவரத்து அதிகாரிகளான ஈரோடு மேற்கு பிரதீபா, கிழக்கு பதுவைநாதன், பெருந்துறை சக்திவேல் ஆகியோர் தணிக்கை செய்வர் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: