ஆரணி அருகே நகை திருட்டில் திடீர் திருப்பம் துணியில் மறைத்து வைத்திருந்த 20 சவரன் தப்பியது

ஆரணி, டிச.28: ஆரணி அருகே நகை திருட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துணியில் மறைத்து வைத்திருந்த 20 சவரன் தப்பியது. ஆரணி அடுத்த வடுக்கசாத்தை சேர்ந்தவர் தர்மன்(59), கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. தம்பதிக்கு 2 மகள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2வது மகளுக்கு திருமணமாகவில்லை. அவர் சென்னையில் தங்கி நகை கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காமாட்சி சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார். தருமன் கடந்த 25ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வேலையை முடித்து விட்டு தருமன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டிய நிலையில் இருந்தது. தொடர்ந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் கலைக்கப்பட்டு பீரோ உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த, 20 சவரனை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தர்மன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் சுரேஷ்குமாரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், சென்னையில் இருந்த காமாட்சியை வரவழைத்து விசாரனை நடத்தினர். இதில், வீட்டின் மற்றொரு அறையில் துணியில் ஒரு பையில் நகைகளை மறைத்து துணியுடன் சேர்த்து வைத்திருந்ததால் நகை கிடைக்காமல் திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டில் பீரோவை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தர்மன் மனைவி நகைகளை துணியில் மறைத்து வைத்திருந்தால் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 20 சவரன் தப்பியது.

Related Stories: