ஒமிக்ரான் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் முகக்கவசத்தை மறந்து சுற்றும் மக்கள்

ஆண்டிபட்டி, டிச. 8: கொரோனா முற்றிலுமாக குறையாத நிலையில், ஒமிக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்கள் விழிப்புணர்வில்லாமல், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திமுக ஆட்சி அமைந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தீவிர நடவடிக்கை எடுத்து 2ம் அலையை கட்டுப்படுத்தினார். ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வெளி நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி புதிய வகை ஒமிக்ரான் வைரஸாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

    

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர். நகரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். இவர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டம், கூட்டமாக நிற்கின்றனர். மேலும், டூவீலர்கள், கார்கள், பஸ்களில் செல்பவர்களும் முகக்கவசம் அணிவதில்லை.     

எனவே, ஆண்டிபட்டியில் பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் ரோந்து சென்று பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வைகை அணை பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: