பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

பழநி, டிச.13: பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் நீதிமன்ற ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடத்தப்படவில்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் உள்ள கோபுரம் போன்றவை சீரமைப்பு, கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. ஒரு வருட காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தொய்வடைந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழநி கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள், பழநி கோயில் 2வது ரோப்கார் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சுமார் ரூ.6 கோடி மதிப்பீட்டில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஆகமவிதிகளுக்குட்பட்டு ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட 18 பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைவாக முடித்து வரும் இன்னும் 6 மாத காலத்திற்குள் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: