திரளான பொதுமக்கள் பங்கேற்பு கும்பகோணம் செல்வதற்கு பேருந்து வராததால் தா.பழூரில் கல்லூரி மாணவர்கள், மக்கள் சாலை மறியல் காவல்துறையினர் சமரசம்

தா.பழூர், டிச.9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்காக அருகே உள்ள தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக மாணவர்கள் காலை 7 மணி முதல் பேருந்துக்காக காத்திருந்தும் 9 மணி வரை பேருந்துகள் வராததால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும் கும்பகோணம் பகுதிக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்காக செல்லும் பொதுமக்களும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்களும் காலை முதல் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். ஊரடங்கு காலத்திற்கு முன்பு பேருந்துகள் பற்றாக்குறை இன்றி சென்று கொண்டிருந்தன. ஆனால் தற்பொழுது ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவது குறைந்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். பேருந்து வராததால் அவர்கள் வகுப்புக்கு செல்ல முடியவில்லை. தற்போது அவை நிறுத்தப்பட்டு உள்ளதால் பள்ளி கல்லூரி செல்வது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பேருந்து நிறுத்தம் அருகே லாரி கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாணவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட வழியில்லாமல் சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தனர். பேருந்து வராததால் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து தா.பழூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கல்லூரி செல்வதற்கு காலை வேளையில் தட்டுப்பாடின்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: