தொழில் முனைவோர் கடன் பெற இன்று முதல் சிறப்பு முகாம்

சிவகங்கை, டிச.8: இன்று முதல் டிச.15 வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் தொழில் முனைவோர் கடன் பெற சிறப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இதன் காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 8.12.2021 முதல் 15.12.2021 வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு திட்டங்களில் சிறப்பு அம்சங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.     

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.     இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து, தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 04565 230210 என்ற தொலைபேசி எண், 70106 94688 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: