ஊட்டியில் 70 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஊட்டி, டிச.8: ஊட்டியில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 70 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி ேஜஎஸ்எஸ் பார்மஸி கல்லூரியில் அனைத்து நாடுகள் மாற்று திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,``தமிழக முதல்வர் பொறுப்பேற்றது முதல் இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 383 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 463 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற அரசு அலுவலகங்களை அச்சமின்றி தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, விழாவில் 9 பேருக்கு ரூ.6.88 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் சுயதொழில் புரிவோருக்கு வங்கிகடன் மானியம், 11 பேருக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் என்டிசிசி., வங்கி மூலம் சுயதொழில் வங்கி கடன் செயல்முறை ஆணை, 6 மன வளர்ச்சி குன்றியோருக்கு ரூ.18 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆணை, 7 கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை, தசைசிதைவு நோயில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.3 ஆயிரம், 15 பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு மடக்குகுச்சி மற்றும் கருப்பு கண்ணாடி ரூ.3750 மதிப்பில் என மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்று திறனாளிகளுக்கு சாதனையாளர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரி, ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மாற்று திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, ஜேஎஸ்எஸ்., கல்லூரி முதல்வர் தனபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: