குளித்தலை- மணப்பாறை சாலையில் நள்ளிரவு பரபரப்பு

குளித்தலை, டிச. 8: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக மதுரை, திண்டுக்கல், தரகம்பட்டி, பாளையம், தோகைமலை மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களும், அதேபோல் சேலம், நாமக்கல், முசிறி, துறையூர், பெரம்பலூர், கரூர், பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களும் தினம் தோறும் ஆயிரக்கணக்கில் இந்த மணப்பாறை ரயில்வே கேட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டாரத்தில் இருந்து பணிக்குச் செல்லும் அலுவலர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இவ்வழியாக தான் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறது

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவ்வழியாக சேலத்தில் இருந்து மணப்பாறை நோக்கி மிஷினரி ஏற்றிசென்ற வாகனம் மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்து தடுப்பு கம்பி மின் வயரில் உரசியதால் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனைக்கண்ட கேட் கீப்பர் உடனடியாக விரட்டிச் சென்று லாரி ஓட்டுனர் ரஞ்சித்தை மடக்கிப் பிடித்தார். அதன்பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில்வே கேட்டை சேதப்படுத்திய லாரி மற்றும் ஓட்டுநர் ரஞ்சித்தை கரூர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதனால் சேதமடைந்த ரயில்வே கேட் வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் தகவலறிந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்து போலீசார் மணப்பாறை யூனியன் ஆபீஸ் நால்ரோடு பகுதியிலிருந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். அதேபோல் சுங்க கேட் பகுதியில் மணப்பாறை செல்லும் வாகனங்களை தண்ணீர் பள்ளி பரளி வழியாக யூனியன் ஆபீஸ் நால்ரோடு பகுதிக்கு செல்லும்வரை அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அதிகாலை திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட பணியாளர்கள் சேதமடைந்த ரயில்வே கேட்டை சரி செய்து 7 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் பகுதியில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: