தான செட்டில்மென்ட்டை ரத்து செய்ய வேண்டும்

ரங்கம் தாலுகா, எலமனூர் நாடார் தெருவை சேர்ந்த தங்கமணி மனைவி இந்திராணி(72) கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், எனக்கு எலமனூரில் 0.17 ஏக்கர் நிலம், தோப்பு உள்ளது. அதில் கெட்டி மெத்ைத வீடும் சொந்தமாக உள்ளது. அந்த இடத்தை எனது கணவர் தங்கமணி, எனக்கும், எனது மகன் நரசிம்மன் ஆகிய இருவர் பெயரிலும் கடந்த 2013ம் ஆண்டு பத்திரம் செய்து கொடுத்தார். எனது மகனும் கடந்த 2014ல் இறந்துவிட்டார். அந்த சொத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளோம். இந்நிலையில் எனது மூத்த மகள் கமலவள்ளியும், அவரது மகன் (எனது பேரன்) லோகேஷ் என்பவரும் சேர்ந்து என்னிடம் மோசடியாக கையெழுத்து பெற்று எனது வீட்டையும், நிலத்தையும் தானசெட்டில்மென்ட் எழுதி கொண்டுள்ளனர். நான் ஏற்கனவே இந்த சொத்து தொடர்பாக எழுதி வைத்த உயில் இன்றளவும் ரத்து செய்யாமல் உள்ளேன். அதில் எனது மூத்த மகளும் மற்றும் இளைய மகள் மீனாட்சியும் சமமாக அடைந்து கொள்ள வேண்டியது என குறிப்பிட்டுள்ளேன். எனவே மோசடியாக பதிவு செய்த தானசெட்டில்மென்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்

மாநில நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் ஜீவா அளித்த மனுவில் கூறியதாவது: பூலாங்குடி நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. ஒரு வீட்டுக்குள் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசிக்கிறோம். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, வீடு கட்டி தரவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

மிரட்டும் கணவர் குடும்பத்தார்

திருப்பராய்த்துறை, எலமனூர், அண்ணாநகரை சேர்ந்த மேனகா காந்தி அளித்த புகாரில், ‘எனது கணவர் பூபதிக்கும் எனக்கும் திருமணமாகி விவகாரத்து வழக்கு நடந்தது. அந்த வழக்கு தள்ளுபடியானதால், எனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கடந்த செப்.6ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எனது கணவர் பூபதி தனலட்சுமி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக கேட்டபோது, எனது கணவர் பூபதி மாமியார் ஆனந்தவள்ளி, மாமனார் வாசுதேவன், தனலட்சுமியின் பெற்றோர் இந்திரன், கலா, அவரது தம்பி ராஜ் ஆகியோர் என்னை மிரட்டுகின்றனர். எனவே நான் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்

சமூகநல ஆர்வலர் கண்ணன் நேற்று அளித்த மனுவில், ‘நீர்நிலைகள் பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகள்படி, திருச்சி காவிரி தென்கரை பகுதிகளான குடமுருட்டி தொடங்கி மேல சிந்தாமணி, கீழ சிந்தாமணி, ஓடத்துறை, தேவதானம் வரையிலான 2 கி.மீ., தொலைவுக்கு காவிரி தென்கரை மண்டபங்கள், படித்துறைகள், இடைவெளி பகுதிகள், நீர்வழி படுகை பகுதிகள் எல்லாம் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். காவிரியை தூய்மைப்படுத்தி, அழகுற பராமரித்து, பாதுகாக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்  குறைதீர் கூட்டத்தில் 465 மனுக்கள் குவிந்தன

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பழனிகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதரச்சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை என பொதுமக்களிடமிருந்து 465 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள டிஆர்ஓ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் அம்பிகாவதி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

More