19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க நீலகிரியில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கம்

ஊட்டி, டிச. 7:  தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார கால விழிப்புணர்வு  நிகழ்ச்சி துவங்கியுள்ளது.தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை பயன்படுத்தி  தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான ஒருவார கால  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் துவங்கியது.மாவட்ட கலெக்டர்  அம்ரித் பங்கேற்று விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார். தொடர்ந்து அவர்  கூறியதாவது:  தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்  பொருட்களின் பயன்பாட்டை 01.01.2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கருதி பிளாஸ்டிக் பை,  கப்பு, டம்ளர், பிளாஸ்டிக் கரண்டி, முலாம் பூசப்பட்ட காகித  தட்டு, பிளாஸ்டிக் வாழை இலை, தோரணங்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வினை பொது  மக்களிடமும், வியாபாரிகளிடமும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்  விதமாக நீலகிரி மாவட்டத்தில் ஒருவார கால தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று துவங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கென  விழிப்புணர்வு போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை  பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து உாிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,  என்றார். முன்னதாக விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடிசைத்து துவக்கி  வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி  பிரியதர்ஷினி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: