பனிமூட்டம், தொடர் மழையால் பசுந்தேயிலையில் கொப்பள நோய் பாதிப்பு

ஊட்டி, டிச.6:  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர். 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. தொடர் மழையால் தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கிறது. மகசூல் அதிகமாக இருந்தாலும் விலை கிலோ ரூ.14க்கும் குறைவாகவே உள்ளது.

இதனிடையே ஊட்டி, குந்தா சுற்று வட்டார பகுதிகளில் தொடர் பனிமூட்டம், தொடர் மழை போன்ற காலநிலை அடிக்கடி நிலவி வருகிறது. போதிய வெயிலான காலநிலை இல்லாததால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த இலை முற்றிலும் காய்ந்து விடுகிறது.  இந்த நோய் தாக்குவதால் தேயிலை செடிகளில் இலைகள் கருகி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் குறைந்துள்ளது. அதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,``மழை காரணமாக பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றங்களால் தேயிலை செடிகளை கொப்புள நோய் பரவலாக தாக்கி வருகிறது. இதனால், தேயிலை செடிகள் கருகுவதால், அதனை விற்பனைக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: