கடந்த அதிமுக ஆட்சியின்போது குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்

திருச்சி, டிச.6: தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வேல்முருகன், துணைத்தலைவர் மாரியப்பன், இணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ‘கொரோனா தடுப்புப் பணியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் விளைவாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைத்து பேசி, தற்காலிக, நிரந்தர சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்பும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

1988ம் ஆண்டுக்கு முன்பு இருந்து 11,000 மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் எண்ணிக்கை, 1995ல் 7,500ஆகவும், 2003ல் 4,311 ஆகவும், 2019ல் 3,300 ஆகவும் குறைக்கப்பட்டது. கொரோனா, டெங்கு மற்றும் உருமாறிய கொரோனா தடுப்பு பணிகள் செய்து, மக்கள் நலன் காக்க, சென்ற ஆட்சியில் குறைக்கப்பட்ட 1,000 பணியிடங்களையாவது திருப்பி வழங்க வேண்டும். பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு அனுப்பப்பட்ட விரிவான கருத்துருவை ஏற்று 1,002 தனி திட்டங்களுக்கான சுகாதார ஆய்வாளர் நிலை, பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் தாசன் வரவேற்றார். துணைத்தலைவர் சிராஜூதீன் நன்றி கூறினார்.

Related Stories:

More