பாபர் மசூதி இடிப்பு தினம் குமரி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு 800 போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில், டிச.6: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லாட்ஜூகள் மற்றும் கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று (6ம்தேதி) நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் உள்ள லாட்ஜூகளில் நேற்று 2 வது நாளாக சோதனை நடந்தது. சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தண்டவாளங்கள், பாலங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப், பாபு மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் தண்டவாளங்கள் மற்றும் ரயில்களில் சோதனை நடத்தினர். ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் மற்றும் பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல் சோதனை சாவடிகளி்ல கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கார்கள், வேன்களில் சோதனை நடந்தது. முக்கிய சந்திப்புகளில் நின்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: