தென்தாமரைகுளம் அருகே சொகுசுகார் பள்ளத்தில் பாய்ந்து போதகர் பலி பேரன் படுகாயம்

கன்னியாகுமரி, டிச.6: தென்தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளை பகுதியில், உப்பள சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அதன் அருகில் உள்ள திருப்பத்தில் நேற்று அதிகாலை மணக்குடி நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி ரோட்டிலிருந்து விலகி, அப்பகுதியில் இருந்த மதில் சுவரை உடைத்துவிட்டு சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முட்புதருக்குள் புகுந்து தலைகீழாக கவிழ்ந்தது. திடீரென்று சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும் காருக்கு உள்ளே இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த முதியவர் மற்றும் வாலிபரை வெளியே மீட்டு வந்தனர். முதியவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இளைஞரும் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்தார். உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் முதியவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் வடக்கு தாமரைகுளம் அருகே உள்ள அட்டக்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போதகர் ஐயா பிள்ளை(70) என்பதும் படுகாயத்துடன் காணப்பட்ட வாலிபர் அவரது பேரன் செல்வின் (19) என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: