வேலூர் பஸ்நிலையத்துக்குள் நுழைய தடை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றும் ஆட்டோ உரிமம் ரத்து

விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை

வேலூர், டிச. 5: வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து, வெளிமாநிலம் மற்றும் ெவளிமாவட்டங்களுக்கும், உள்ளூர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேசமயம் புதிய பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கு இயக்கிய பஸ்களும் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் வழக்கமான பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனால் வேலூர்பழைய பஸ்நிலையத்தில் அதிகளவில் நெரில் ஏற்பட்டு, பஸ்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே, பஸ்களை விட அதிகளவிலான எண்ணிக்கையில், ஆட்டோக்கள் பஸ்நிலையத்திற்குள் தடையை மீறி வந்து செல்கிறது. இதனால் பஸ்கள் செல்லமுடியாமல் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தும், மீண்டும், மீண்டும் பஸ்நிலையத்திற்குள் ஆட்டோக்கள் இயக்குவது கண்டறியப்பட்டது. இதில் 25 ஆட்டோக்கள் பலமுறை பஸ்நிலையத்திற்குள் வந்து சென்றது தெரியவந்தது.

மேலும் 15 ஆட்டோக்கள் நேற்று தடையை மீறி பஸ்நிலையத்திற்குள் வந்தது தெரியவந்தது. இந்த ஆட்டோ ஒட்டுனர்கள் அனைவரும் வேலூர் போக்குவரத்து காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். போக்குவரத்து காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே பஸ்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் நுழைய கூடாது.

மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் 50 ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More