புத்தாநத்தம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

மணப்பாறை, டிச. 5: புத்தாநத்தம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம். புத்தாநத்தம் அருகேயுள்ள வடக்கிப் பட்டி பகுதியில் உள்ள குளம் மற்றும் ஆறுகளில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனைப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடக்கிப் பட்டியிலிருந்து புத்தாநத்தம் நோக்கி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழக கவுண்டம்பட்டியை சேர்ந்த முத்துக் கருப்பன் மகன் வெம்முடி(எ) முனியாண்டி (24) மற்றும் கருப்பூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராமர் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் வடக்கிப் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி(42) என்பவரை தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்: முதியவர் பலி

துறையூர், டிச. 5: துறையூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். துறையூர் அருகேயுள்ள சோபனபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மராஜ்(61). இவர் தனக்கு சொந்தமான பைக்கில் நேற்று துறையூருக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வேலை முடிந்த பின்னர் மீண்டும் சோபனபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மொபட்டில் உப்பிலியபுரத்திலிருந்து கீரனூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

துறையூர் - தம்மம்பட்டி சாலையில் ஒக்கரை பிரிவு ரோடு அருகே இரு டூவீலர்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த பத்மராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். லேசான காயமடைந்த கருப்பையா துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பத்மராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய உப்பிலியபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More