உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி காது கேளாத புகைப்பட கலைஞர்களுக்கு இலவச சுற்றுலா

மாமல்லபுரம், டிச.4: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 20க்கும் மேற்பட்ட காது கேளாத புகைப்பட கலைஞர்கள் மாமல்லபுரத்தில் இலவசமாக புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். உலக மக்கள், அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதையடுத்து, 1992 டிசம்பர் 3ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளி தினமாக அறிவித்தது. அன்று முதல், ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

இதையொட்டி, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை புகைப்பட கிளப்பில் உள்ள 20க்கும் மேற்பட்ட காது கேளாத புகைப்பட கலைஞர்கள் நேற்று மாமல்லபுரம் சென்று, புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்த்து, மகிழ்ந்தனர்.  அவர்களை ஊக்குவிக்கும் வகையில், காற்றுலா துறை சார்பில் பஸ் மூலம் அழைத்து வந்து, மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை இலவசமாக சுற்றிக்காட்டி, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் உள்ள சிற்பங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள், மாலையில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுடன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி, மாமல்லபுரம் துணை சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: