பாசனநீரை தடுத்ததை கண்டித்து மூன்று கிராமமக்கள் போராட்டம்

மானாமதுரை, டிச.3: மானாமதுரை அருகே மேலப்பசலை கண்மாய் நீர் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக கிராமத்தினர் கலுங்கை அடைத்தனர். இதனால் 3 கிராமங்களுக்கு செல்லும் மழைநீரை தடுத்ததாக கூறி 3 கிராமங்களை சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். வருவாய்த்துறையினரின் சமரச பேச்சுவார்த்தைக்குபின் கலைந்து சென்றனர். மானாமதுரை அருகே மேலப்பசலை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து நீர் செல்கிறது. மேலப்பசலை கண்மாயை கடந்து சோமாத்தூர், கள்ளிக்குடி, புத்தூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு பாசனநீர் சென்று கண்மாயை நிரப்பும்.

இந்நிலையில மேலப்பசலை கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்ததால் கண்மாய் உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் வந்துவிடும் என்று கிராமத்தினர் கண்மாய் கலுங்கை அடைத்தனர். கலுங்கில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் கள்ளிக்குடி சோமாத்தூர், புத்தூர் ஆகிய கிராம கண்மாய்களுக்கு செல்லாது என்பதால் அந்த 3 கிராமங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் கிராமத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.  தகவல் அறிந்து அங்கு சென்ற மானாமதுரை தாசில்தார் தமிழரசன், மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 கிராமங்களுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

More