வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடுதல் மணல்மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை

மானாமதுரை, டிச.3: மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிமழைநீரால் வைகைஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கண்மாய்களை பாதுகாக்க மணல் மூட்டைகள், மண் அள்ளும் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் வழியாக வைகை ஆறு செல்கிறது. மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, அன்னியேந்தல், முத்தனேந்தல், ராஜகம்பீரம்,  மானாமதுரை, கீழப்பசலை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் வைகை ஆற்றில் திருப்புவனம், மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கரையோர கிராம கண்மாய்கள் தொடர்மழை காரணமாக நிரம்பி மாறுகால் பாய்கிறது. சில கிராமங்களில் கரைகள் பலமிழந்து காணப்படுவதால் கலுங்குபகுதியில் விவசாயிகளே தண்ணீரை மண் அள்ளும் இயந்திரம் மூலம் வெட்டி ஆற்றில் கலக்குமாறு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உப்பாற்றின் கரைகளை சேதப்படுத்திய வெள்ளநீர் செய்களத்தூர் பெரியகண்மாயை நிரப்பியது. கண்மாய் எந்நேரமும் உடையும் நிலை ஏற்பட்டதால் கிராமத்தினரிடம் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் பேசி கண்மாய் கலுங்கு அருகே மண் அள்ளும் இயந்திரம் மூலம் கரைகளை பிரித்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.  இதனால் செய்களத்தூர் பெரியகண்மாய் உடையாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், வைகை கரையோர கிராமகண்மாய்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. வைகை ஆற்றில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளநீர் அதிகளவில் செல்கிறது. பலகிராம கண்மாய்கள் தொடர்மழைக்கு நிரம்பி உள்ள நிலையில் மேலும் மழை பெய்தால் கண்மாய்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம். கண்மாய் கரைகளை கண்காணித்து வருகிறோம். பொதுப்பணித்துறையினர் பலமிழந்து காணப்படும் கரைகள் உடையாமல் இருக்க தேவையான மணல் மூட்டைகள் தயாராக வைத்துள்ளனர். மேலும் மண் அள்ளும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது என்றனர்.

Related Stories: