4 நாட்களாக பிணவறையில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபரின் உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள்

திருச்சி, டிச. 3: திருச்சி சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மல்லியம்பத்துவில் உள்ள மயான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை ஊராட்சி நிர்வாகம் மீட்டது. மயான நிலம் மீட்கப்பட்டதற்கு சிவக்குமார் ஊராட்சி நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த 28ம் தேதி சிவக்குமாரை 2 பேர் கட்டையால் தாக்கினர். இதில் சிவக்குமார் பலியானார். சோமரசம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிவகுமாரின் மனைவி மைதிலி அளித்த புகாரின்பேரில் பிரபாகரன் (எ) மருதைராஜ், தீபக் மற்றும் அவர்களை தூண்டியதாக பிரபல வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளரான ரவி முருகையா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் பிரபாகரன், தீபக்கை கைது செய்தனர்.

இதற்கிடையில் கொல்லப்பட்ட சிவக்குமாரின் உடலை உறவினர்கள் வாங்காமல், தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்யக்கோரியும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முன்தினம் உறவினர்கள் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களிடம் கலெக்டர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு இழப்பீடு தொகை வழங்க முடியாது. தேவைப்படும்பட்சத்தில் கொலை செய்யப்பட்டவரின் மனைவிக்கு அங்கன்வாடியில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிடப்படும் என்றார். இதில் சமாதானமடைந்த உறவினர்கள், சிவக்குமார் உடலை 4 நாட்கள் கழித்து நேற்று பெற்றுச்சென்று இறுதி சடங்கு நடத்தினர்.

Related Stories:

More