இல்லம் தேடி கல்வி மையத்தினை அமைச்சர் துவக்கி வைத்தார்

ஈரோடு, டிச. 2:ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி மையத்தின் துவக்க விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கல்வி மையத்தினை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இல்லம்தேடி கல்வி திட்டத்திற்காக தன்னார்வலர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயல்படுகிறது. ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் வெவ்வேறு வயதினராக இருப்பதால் தொடக்கநிலை (1 முதல் 5ம் வகுப்பு வரை)  மற்றும் உயர்தொடக்கநிலை (6 முதல் 8ம் வகுப்பு வரை) என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 குழந்தைகளுக்கு ஒரு மையம் வீதம் இல்லம் தேடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், தற்போது வரை 10,615 பேர் இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னார்வலர்களாக செயல்பட பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 1,250 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் திறனறித் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் 738 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 508 மையங்கள் மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் சேகரன், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More