கொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு

கொள்ளிடம், ஏப்.23: கொள்ளிடம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்,மாதானம்,குன்னம், மாதிரவேளூர், நல்லூர்,எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. நல்லூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனைத்து சுகாதார நிலையங்கள் மூலமும் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக் கவசங்கள், மற்றும் கிருமிநாசினி ஆகியவைகள் கையிருப்பு இல்லாததால் தினந்தோறும் வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவ எதிர்த்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இது குறித்து கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இருந்துவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து தீவிர பணியாற்றி வருகின்றனர். ஆனால் கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கிருமி நாசினி மற்றும் முக கவசங்களை உடனடியாக கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தங்கு தடையின்றி வழங்க மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>