கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தப்பியவர் வாகன சோதனையில் சிக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் 20 கிமீ விரட்டிச் சென்று பிடித்த போலீசார்

திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் வேல்வார் கோட்டையைச் சேர்ந்தவர் தாலிப் ராஜா(26). இவர் திருட்டு வழக்கில் நகர் வடக்கு போலீசால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் அங்கிருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்வதற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தாலிப் ராஜா தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த வாரம் திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபால்நகரில் டூவீலர் திருடுபோனது. டூவீலரை திருடிய நபரை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை நிற்குமாறு கூறினர். ஆனால் அவர் நிற்காமல் தப்பினார். அவரை சுமார் 20 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த வாரம் கோபால் நகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் என தெரியவந்தது. மேலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது போலீசிடம் தப்பிய தாலிப் ராஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நத்தத்தைச் சேர்ந்த பழனி (எ) சாகுல் ஹமீது என்பவனுடன் சேர்ந்து திருப்பூரில் இருவேறு இடங்களில் வழிப்பறி செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நத்தம் பழனியை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>