அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் விநியோகம்

நாகர்கோவில், ஏப்.23: கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்பு பாட பயிற்சி கட்டகமும் (பிரிட்ஜ் கோர்ஸ்), 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் (ஒர்க் புக்) உருவாக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாட பயிற்சி கட்டகம் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒன்றில் தமிழ், ஆங்கிலம் பாடங்களும், தொகுதி 2ல் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களும் இடம்பெற்றிருக்கும்.  கணித பாடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும், இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்க கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.பயிற்சி புத்தகம் ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யக்கூடிய வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நேற்று குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் பயிற்சி புத்தக விநியோகத்தை தொடக்கி வைத்தார். ஆசிரியர் வேலவன், மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

Related Stories: