(வேலூர்) கெங்கை அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது குடியாத்தத்தில் கொரோனா தொற்று அச்சம்

குடியாத்தம், ஏப். 20: குடியாத்தத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கெங்கையம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். முன்னதாக திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்னரே குடியாத்தம் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்தும், பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். மேலும், குடியாத்தம் நேதாஜி பஸ் நிலைய பகுதியில் திருவிழாக்காலங்களில் கூட்ட நெரிசலாக காணப்படும்.

ஆனால், தற்போது ெகாரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த தடை விதித்துள்ளது. இதனால், பிரசித்திபெற்ற கெங்கை அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை குறைந்ததால் வெறிச்சோடி உள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாட்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கெங்கை அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் வெளியூர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். ஆனால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டதால் கோயிலில் கூட்டமின்றி வெறிச்சோடியது.

Related Stories:

>