உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை, ஏப்.20: உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கீழே வீசி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, நூறு நாள் வேலை உழவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், புருஷோத்தமன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, உரம் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டனர்.

மேலும், ஏற்கனவே சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், உரம் விலையை உயர்த்தியிருப்பது விவசாயத்தை முடக்கும் செயலாகும் என தெரிவித்தனர். அதோடு, உரம் விலையை கட்டுக்குள் வைத்திருக்க, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நூதன போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>