கொரோனா மருந்து தட்டுப்பாடு 91 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

விருதுநகர்,ஏப்.20: விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி இல்லாததால் கோவிசீல்டு இரண்டாம் தவணை மற்றும் புதிய நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் 91 மையங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2ம் அலை வேகம் காட்டி வருகிறது. முதல் அலையில் தினசரி பாதிப்பு 6ஆயிரத்திற்குள் இருந்த நிலையில், 2ம் அலை பரவல் தினசரி 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்நிலையில், தொற்று பரவல், உயிரிழப்பை கட்டுப்படுத்த கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 17,740 பேருக்கு தொற்று பாதித்து, 235 பேர் உயிரிழந்தும், 566 பேர் சிகிச்சையிலும், 16,939 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 31 அரசு மற்றும் தனியார் மையங்களிலும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 60 அரசு மற்றும் தனியார் மையங்கள் என 91 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 1,38,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 16,500 பேர் மட்டும் இரு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி மட்டும் இரண்டாவது தவணை போடுவதற்கு 6 ஆயிரம் டோஸ் மட்டும் இருப்பில் உள்ளது.

கோவிசீல்டு தடுப்பூசி காலியாகி விட்ட நிலையில், முதல் தவணை கோவிசீல்டு போட்ட நபர்களுக்கு 2வது தவணை போட தடுப்பூசி மருந்து இல்லை. இதனால் நேற்று மாவட்டத்தின் 91 மையங்களிலும் தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி புதிதாக வந்தால் மட்டும் போட முடியும். கோவாக்சின் 2வது தவணை போட வேண்டியவர்களுக்கு மட்டும் ஊசி போடப்படும். கோவிசீல்டு 2வது தவணை போட வேண்டிய நபர்களுக்கு தடுப்பூசி வந்த பிறகே போடப்படும். கோவிசீல்டு 2வது தவணை போட வேண்டிய நபர்களுக்கான இடைவெளி 4 வாரம் என்பது 6 வாரங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 தவணை போடுவதில் தற்போதுள்ள காலதாமதத்தால் எந்த பாதிப்பும் வராது. ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கு 25 ஆயிரம் தடுப்பூசி வழங்க கோரிக்கை அனுப்பி இருக்கிறோம், ஒரிரு நாட்களில் தடுப்பூசி எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

Related Stories:

More
>