கோவிட் கட்டுப்பாட்டு நேரங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை

புதுக்கோட்டை, ஏப்.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் கட்டுப்பாட்டு நேரங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். கோவிட் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலேசானை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள்; முகக்கவசம் இன்றி வெளியில் வரக் கூடாது என்றும், உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நேரக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல், காவல்துறையினர் மூலம் ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க செய்தல் போன்றவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் சித்த மருத்துவப் பிரிவினை மீண்டும் திறப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நாளை (இன்று) முதல் அரசாணை 346-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பணியாளர்கள் கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வழங்கவும், வாடிக்கையாளர்கள் நேரடியாக பொருட்களை எடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் உள்ளே வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி திரவம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் மறுமுறை தவறாமல் முகக்கவசம் அணிவார்கள் என்பதனால் அபராத நடைமுறையை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை 11 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் 58,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. எனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி கிடையாது. நுழைவுசீட்டு இல்லாத எவ்வித வாகனங்களும் உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வசதி உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்கள் தினமும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் காலை, மாலை 2 முறை ஆய்வு செய்யப்பட்டு இதன் விபரங்கள் அங்குள்ள பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மூலமும் வாக்கு எண்ணும் மையம் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறையாக கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) ராமு, பொது சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>