கோயில் வாசலை அடைத்து அமைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பெட்டி இடமாற்றம்

திருக்காட்டுப்பள்ளி,ஏப்.19: திருக்காட்டுப்பள்ளியில் கோயில் வாயிலை அடைத்து வைக்கப்பட்டிருந்த மின்சார கேபிள் ஜங்ஷன் பெட்டி தினகரன் செய்தியால் இடமாற்றம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் காந்திசிலை அருகே உள்ளது நவநீத கிருஷ்ணன் கோயில். இதன் நுழைவு வாயில் கடைவீதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நுழைவு வாயில் மூலமாக சுவாமியை தரிசித்து வந்தனர். இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் தமிழ்நாடு மின்வாரியம் மூலமாக மத்திய தொகுப்பு திட்டத்தின் கீழ் பூமிக்கு அடியில் கேபிள் பதித்து மின்சாரம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக வேலைகள் நடந்தது.

இதில் நவநீதகிருஷ்ணன் கோயில் செல்லும் நுழைவு வாயிலையே அடைத்து மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸ் வைத்துள்ளனர். இதனால் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இதனை வைக்கும் போதே கோயிலுக்கு செல்லும் வழியை மறைக்கும் என்று கூறியும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி வணிகர்கள் கூறினர். எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை பார்வையிட்டு கோயில் நுழைவு வாயிலை மறைத்து கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் வைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸை இடமாற்றம் செய்தனர். கோயில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>