தொற்று அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகவும்

அரியலூர்,ஏப்.19: நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் குறித்து பேசப்பட்டது.

கொரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், இச்சிகிச்சை மையத்தில் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகளுடன் மருத்துவ உபகரணங்கள் இருப்பு மற்றும் தேவைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் ரத்னா தெரிவித்ததாவது: கொரோனா தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2021 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் சோப்பு போட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காதவர்களிடம் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையின் மூலமாக அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைப்பிடித்து. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) இளவரசன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நார் (உடையார்பாளையம்) மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: