எங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, ஏப். 18: தமிழகத்தில் கொரோனா பரவல் 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னை உட்பட 20 மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தற்போது, தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 45 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது: டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் விற்பனையாளர், மேற்பார்வையாளர், துணை விற்பனையாளர் என்ற பல்வேறு பதவிகளின் கீழ் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் போது டாஸ்மாக் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக கருதி தடுப்பூசி போட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

தற்போது 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுவதால் அதற்கு கீழ் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை. நாள்தோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை டாஸ்மாக் கடை பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால், எங்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 45 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறையுடன் இணைந்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென தனியாக முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories:

>