போக்குவரத்துகழகத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க கோரிக்கை

நாகை, ஏப்.18: அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிக்காலத்தில் பணியின் போது இறந்துபோன பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள குடந்தை, விழுப்புரம், மதுரை, சேலம், கோவை என 8 கோட்டங்களில் கடந்த 2001ம் ஆண்டு முதல் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது செய்யப்படவே இல்லை. வாரிசு பணிக்காக பணி மூப்பு பட்டியலில் பதிவு செய்யும் வாரிசு பணி வழங்காமல் போக்குவரத்து துறை இழுத்தடித்து வருகிறது. இதனால் அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் என்பதை கைவிட்டு வேலைவாய்ப்பு அலுவலக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. போக்குவரத்து துறைக்காக தனது உயிரை விட்ட பணியாளர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More