8 மாதங்களுக்கு பின் குமரியில் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 348 ஆக உயர்வு

நாகர்கோவில், ஏப்.18 : குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100, 150 என்ற அளவில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 200 ஐ தொடும் அளவுக்கு வந்துள்ளது. நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 174 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 6 பேர், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மீதி 168 பேர், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் அதிகபட்சமாக 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 20 பேர், குருந்தன்கோட்டில் 7 பேர், தோவாளை ஒன்றியத்தில் 7 பேர், திருவட்டாரில் 17 பேர், தக்கலையில் 13 பேர், மேல்புறத்தில் 13 பேர், ராஜாக்கமங்கலத்தில் 13 பேர், முஞ்சிறை ஒன்றியத்தில் 3 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். செருவல்லூரை சேர்ந்த 52 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு பின், ஒரே நாளில் 170 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 600 பேர் சிகிச்சையில் உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முக கவசம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பயோனியார் குமாரசாமி கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும் கொரோனா கேர் சென்டர் ஏற்பாடு செய்யப்பட்டு, 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப இங்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories: