திருவானைக்காவல் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை மயங்கிய பெண்ணுக்கு 2 மணி நேரமாக சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை பொதுமக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

திருச்சி, ஏப். 17:  திருச்சி திருவானைக்காவலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தாய் சேய் நல மையமும் இயங்கி வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொள்வதற்கும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அதிகளவில் மக்கள் வந்தனர்.

திருவானைக்காவல் அருணா நகரை சேர்ந்த தனது தாத்தாவுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அவரை அழைத்து கொண்டு நேற்று ஒரு பெண் வந்தார். சிறிது நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த பெண் மயங்கி விழுந்தார். ஆனால் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முன்வரவில்லை. இதனால் 2 மணி நேரமாக மயக்க நிலையிலேயே பெண் இருந்தார். பின்னர் பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்களிடம் அங்கிருந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விட்டு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உட்கார வைத்து பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதையடுத்துஆம்புலன்ஸ் வந்ததும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். டாக்டர்களின் அலட்சியத்தால் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 2 மணி நேரம் தாமதமானது. மயங்கி விழுந்த பெண்ணின் உறவினருக்கு கொரோனா இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர்.

Related Stories:

>