மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தகராறு செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுகோள்

திருச்சி, ஏப். 17: தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை வேகமெடுத்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் மட்டும் தமிழகத்தில் பாதிப்பு 7,987. திருச்சியில் நேற்றுமுன்தினம் 241 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். திருச்சியில் தொடக்கத்தில் 2 ஆயிரம் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சோதனை எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று சதவீதம் உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து காலை நேரங்களில் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதாக வந்த புகாரை அடுத்து மாநகர கமிஷனர் அருண், திருச்சி மாநகரில் உள்ள 7 காவல் சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாநகர போலீசார் அனைத்து காவல் சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று காலை புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த பேருந்துகளை ஏர்போர்ட் காவல் சோதனை சாவடியில் பொன்மலை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அப்துல்கபூர் தலைமையிலான போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அரசு மற்றும் தனியார் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் நடத்துநர், ஓட்டுநருக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கூறி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமும் பஸ்களில் படிகட்டுகளில் தொங்கும் அளவுக்கு பயணிகளை ஏற்றி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் பயணிகளை இறக்கிவிட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. ஆட்டோ, வேன், கார்கள் என தனியார் வாகனங்களில் மட்டும் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகர கமிஷனர் அருண் கூறுகையில், கொரோனா பாதிப்பு குறைக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைவரும் முககசவம் அணிந்திருக்க வேண்டும், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதற்கட்டமாக இதனை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வழக்குபதிந்து அபராதம் விதிக்கப்படும். பஸ்களில் நடத்துநர் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாரேனும் தகராறில் ஈடுபட்டால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். திருச்சியில் உள்ள தியேட்டர்கள், 22 மால்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். விதிமீறினால் வழக்குபதியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருச்சி கோட்டத்தில் 430 மாநகர பஸ்கள், 496 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் அதிகளவு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 45 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவுகளை பின்பற்ற அனைத்து ஓட்டுநர், நடத்துனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: