டவுன் நயினார்குளம் காய்கனி சந்தையில் 55 சில்லரை விற்பனை கடைகளுக்கு தனி இடம் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

நெல்லை, ஏப். 16: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கனி சந்தை வளாகத்தில்  55 சில்லரை விற்பனை கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு கடை அமைக்கும் பணி நடந்தது. நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்காத  வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 3க்கும் மேற்பட்ட  நபர்களுக்கு கொரோனா பரவிய பகுதிகள், 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக  சீல் வைக்கப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு தலா  ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த வாரம், நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் உள்ள மொத்த காய்கனி விற்பனை  சந்தையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.  இந்த வளாகத்தில் செயல்படும் சுமார் 55 சில்லரை காய்்கறி கடைகளை மட்டும்  சமூக இடைவெளியுடன் மாற்று இடங்களில் அமைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து  மொத்த காய்கனி விற்பனை மைய வளாக பின்பகுதியில் சுமார் 2.5 ஏக்கருக்கு  காலியிடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்து சில்லரை விற்பனை கடைகளை அதிகாலை 4 மணி முதல் காலை  வரை  நடத்திக் கொள்ள மாநகராட்சி அனுமதியை  வியாபாரிகள் கோரினர். தொடர்ந்து இந்த காலியிடத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும்  பணி நேற்று நடந்தது. மாநகராட்சி அனுமதி அளித்தவுடன் இந்த பகுதியில் சில்லரை  விற்பனை கடைகள் சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கு அடுத்த ஒரு சில நாட்களில்  ஏற்பாடு செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனிடையே  நயினார்குளம் மொத்த சந்தை  சாலையில் நேற்று முதல் சிலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தினமும் 30 டன் வரத்து

நெல்லை  டவுன் நயினார்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தைக்கு வெளி மாவட்டம்  மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 60 கனரக வாகனங்களில்   மொத்தம் 21 டன் எடையிலான காய்கனிகள் விற்பனைக்கு வருகின்றன. இதேபோல் உள்ளூரில் இருந்து 30க்கு மேற்பட்ட  லாரிகள் மூலம் 9 டன் காய்கனிகள் கொண்டு வரப்படுகிறது. மொத்த காய்கனி மூட்டைகள்  உடனுக்குடன் எடை போட்டு வேறு  இடங்களுக்கு அனுப்பப்படுவதால் இந்த பகுதிகளில் அதிகளவில் மக்கள் நெரிசல்  ஏற்படுவதில்லை. எனவே  மொத்த வியாபாரம், ஏற்கனவே செயல்படும் பழைய இடத்தில்  நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories: