வீட்டை உடைத்து 60 சவரன், ₹1.5 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

காஞ்சிபுரம், ஏப்.15: காஞ்சிபுரம் அருகே இரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்து 60 சவரன் தங்க நகை, ₹1.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். காஞ்சிபுரம் அடுத்த சித்தேரி மேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (38). ரயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு தரையரசன், குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், அங்கு வந்த மர்மநபர்கள் இவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட்டை சத்தமில்லாமல் உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டினுள் இருந்த பீரோவின் சாவியை எடுத்து, பீரோவை திறந்து சுமார் 60 சவரன் நகை, ₹1.5 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றனர். நேற்று காலை எழுந்த துரையரசன், பீரோ திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். அதில் இருந்த 60  சவரன், ₹1.5 லட்சம் ஆகியவை திருடுபோனதால் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் பாலுசெட்டி சத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டின் கிரில் கேட் உள்பட சில பகுதிகளில் தடவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் சிறிது தூரம் சென்று நின்றது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: