திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

திண்டிவனம், ஏப். 15: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசியார் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(50), லாரி ஓட்டுநர். இவரது மனைவி விஜயலட்சுமி(45). இவர் திண்டிவனம் நேரு வீதியில் விதைகள் விற்பனை செய்து வருகிறார். ஏழுமலை சென்னையில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு விதைகள் விற்பனை செய்வதற்காக திண்டிவனம் சென்றார். மீண்டும் இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் முன்பக்க கதவை உள்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு கொள்ளையர்கள் பின்பக்க கதவு வழியாக தப்பி சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது மணிபர்சில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் நேற்று காலை மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் டிஎஸ்பி தனிப்படை போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் அருள், காவலர் செந்தில் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து, தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>