காற்றில் பறந்த கொரோனா விதிமுறை வாரச்சந்தைகளில் முகக்கவசமின்றி குவியும் மக்கள்

ஓமலூர், ஏப்.14: ஓமலூர் பகுதியில் கூடும் வாரச்சந்தையில் முகக்கசவம் அணியாமல் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் தாரமங்கலம் வட்டாரத்தில் வாரச்சந்தைகள் அதிகமாக நடைபெறுகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஏதாவது ஒரு கிராமத்தில் சந்தை கூடுகிறது. காய்கறி, மளிகை பொருட்கள், தானியங்கள் வாங்க மக்கள், இந்த வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவலை அடுத்து, மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் வாரச்சந்தைகளில் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை.

நேற்று ஓமலூர் செவ்வாய்சந்தையில் குறைந்த அளவிலான கடைகள் போடப்பட்டது. மக்கள் வருகையும் குறைந்தே காணப்பட்டது. ஆனால், கடையில் வியாபாரம் செய்பவர்களும், பொருட்கள் வாங்க வந்த மக்களும் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். முறைாயக சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிடில், கொரோனா பரவ வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 24 ஆயிரம் பேருக்கு அபராதம்: சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் தனிநபர்கள்,  அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்காத நடைபாதை வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாநகரில் இதுவரை நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத 24,753 நபர்கள் மற்றும் 107 நிறுவனங்களுக்கு ₹61 லட்சத்து 69ஆயிரத்து 840 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கொரோனா நோய் தாக்கத்தை உணர்ந்து, மிக அவசர தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: