மீனவ பஞ்சாயத்தார் தேர்வு செய்வதில் தகராறு அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்

நாகை, ஏப்.14: நாகையில் சுனாமி ஏற்பட்ட பின்னர் ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் நகரில் பல்வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஆரியநாட்டு தெரு மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், ஆரியநாட்டு தெரு மீனவர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு நாகை நகர பகுதியில் சென்ற மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை ஆரியநாட்டு தெரு மீனவர்கள் அரிவாளால் வெட்டினர். மேலும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர்களை பார்க்க வந்தவர்களையும் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தனர். இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுநாள் வரை யாரையும் கைது செய்யவில்லை. இதை கண்டித்து நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பெரியசாமி மற்றும் போலீசார் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவதாக உறுதியளித்தனர். இதன்பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அருகில் உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Related Stories: