முக கவசம் அணியாதவர்களிடம் 5.67 லட்சம் அபராதம் வசூல்: காஞ்சி கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, குன்றத்தூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில்  முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து செங்கல்பட்டு பகுதிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. இதைதொடர்ந்து, கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி செங்கல்பட்டு எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின்பேரில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள், பைக்கில் முககவசம் அணியாமல் சென்றவர்கள் என பலரிடம் தலா 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் சென்றால் 500 முதல் 2000 வரை அபராதம் வசூலித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு நகர பகுதிகளில் செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஷ் பச்சோரா தலைமையில் போலீசார் முககவசம் அணியாமல் செல்வர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து எஸ்பி சுந்தரவதனன் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. முகவசம் அணியாமல் செல்பவர்கள் சமூக இடைவெளியின்றி  அதிகளவில் பொதுமக்களை வாகனங்களில் ஏற்றி செல்வர்களின் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது.  இதுவரை மாவட்டம் முழுவதும் அபராத தொகையாக 50 லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.  அரசின் அறிவுரைகளை பின்பிற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

திருப்போரூர்:

திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், உரிமையாளர்கள், செல்பவர்கள், மற்றும் பஸ் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே இருக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த பிரசாரத்தையும் மீறி முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடம், தலா ₹200 வசூல் செய்யப்படுகிறது. திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று ஒவ்வொரு கடையாக திடீர் சோதனை மேற்கொள்கின்றனர். அப்போது கடைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோன்று திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் பன்னீர்செல்வம், சந்திரசேகரன் ஆகியோர் திருப்போரூர் ரவுண்டானா, இள்ளலூர் சந்திப்பு, கொட்டமேடு சந்திப்பு ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் 200 அபராதம் வசூலிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளை நேற்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் கொரோனாவால் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா படிப்படியாக குறைந்து, பிப்ரவரி மாதம் ஒரு சதவீதமாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 15 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அதில் குன்றத்தூர் பேரூராட்சியில் 3, குன்றத்தூர் ஒன்றியத்தில் 6, காஞ்சிபுரம் நகராட்சியில் 6 உள்ளன. இவை முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். மக்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவாக்சின், கோவிட் ஷீல்டு ஆகிய மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வரப் பிரசாதமாக உள்ளன. இந்த ஒரு வார காலத்தில் முககவசம் அணியாமல் இருந்தவர்களிடம் இருந்து இதுவரை 5.67 லட்சம் அபராதமாக வசூல் செய்துள்ளோம் என்றார்.

Related Stories: