கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு: கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்:  கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் வேடம் அணிந்துவந்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தனர்.  ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு கோயில் திருவிழாக்கள் நடைபெற்றால் மீண்டும் கலை நிகழ்ச்சிகள் நடந்து, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் சீராகும் என நம்பியிருந்தனர். ஆனால், தற்போது கொரானா தொற்று இரண்டாவது அலையாக பரவி வரும் காரணத்தால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, திருவிழாக்கள் நடை பெற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் கோயில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவிழாவில் நடைபெறும் நாட்டுப் புற கலைநிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, நாட்டுப் புற கலைஞர்களின் வாழ்வாதாரம் காத்திட, கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்கள் நடத்தவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி சமூக இடைவெளியுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories: