திருப்போரூர் அருகே கொட்டமேடு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் சாலையோர மின் மோட்டார் கட்டிடம்: உடனே அகற்ற கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கொட்டமேடு பகுதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோர மின் மோட்டார் கட்டிடம் உள்ளது. இதனை உடனே அகற்ற வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை கொட்டமேடு அருகே சாலையோரத்தில் மயிலை ஊராட்சிக்கு சொந்தமான 3 ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் மோட்டார் அறை உள்ளது. இரு வழிச்சாலையாக இருந்த இந்த சாலை, தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் சாலையை விட்டு தள்ளி இருந்த மின் மோட்டார் கட்டிடம் தற்போது சாலையை ஒட்டி மிக நெருக்கமாக வந்து விட்டது. மேலும், இந்த கட்டிடத்தின் ஜன்னல் மீது அமைக்கப்பட்ட கான்கிரீட் சிலாப் சாலையை உரசியபடி உள்ளது. தற்போது சாலை அகலப்படுத்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிப்பவர்கள் சாலையோரம் இந்த கட்டிடம் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைவதுடன், சில உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.

எனவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த ஊராட்சியின் மின் மோட்டார் அறையை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து மயிலை ஊராட்சி செயலாளர் முனுசாமியிடம் கேட்டபோது, மயிலை ஊராட்சி மன்றம் சார்பில் மின் மோட்டார் அறையை மாற்றி அமைக்கவும், புதிய குழாய்களை புதைக்கவும் அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் கடிதம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. விரைவில் பொது மக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ள மின் மோட்டார் அறை அகற்றப்படும் என்றார்.

Related Stories: