தறிகெட்டு ஓடி மின் கம்பத்தை உடைத்து வயல்வெளிக்குள் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி: குன்றத்தூர் அருகே பரபரப்பு

குன்றத்தூர்: தறிக்கெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சாலையோர மின்கம்பத்தை உடைத்து தள்ளி, அருகில் உள்ள வயல்வெயில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில், டிரவைர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குன்றத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இருந்து கார் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக காட்டாங்கொளத்தூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த டிரைவர் ராஜா (63) ஓட்டி சென்றார். குன்றத்தூர் அருகே மலையம்பாக்கம் பகுதியில் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. இதில், சர்வீஸ் சாலையில் உள்ள மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி, சாலையோரம் இருந்த வயல் வெளியில் தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் ராஜா, லாரியின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். இதற்கிடையில், லாரி மோதியதில, மின்கம்பம் இடிந்து கீழே விழுந்தது.

 

அவ்வழியாக சென்ற பொதுமக்கள், உடனடியாக டிரைவர் ராஜாவை மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களாக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: