தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் சங்க தலைவர் ரூபன், கௌரவத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து மனு அளித்தனர். அந்தமனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் ஒன்று தெருக்கூத்து கலைத்தொழில். இந்நிலையில் தற்போது சில நாட்களாக கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு மீண்டும் தெருக்கூத்து கலைகளில் ஈடுபட உள்ள நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். தெருக்கூத்து கலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், நாங்கள் உயிர் வாழ இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே இது குறித்து அரசு பரிசீலித்து தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தவும், தகுந்த இடைவெளியுடன், முகக்கவசங்கள் அணிந்துகொண்டு, நூற்றுக்கும் குறைவான நபர்கள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு நிகழ்ச்சியை நடத்திட, ஏதுவாக அமையும் வகையில் உத்தரவிட்டு தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: