நீர்வரத்து இல்லாததால் சண்முகா நதி அணை நீர்மட்டம் சரிவு

உத்தமபாளையம், ஏப். 12: உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணைக்கு நீர்வரத்து இல்லாததால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. உத்தமபாளையத்தை அடுத்த, ராயப்பன்பட்டி அருகே, 52.55 அடி உயர சண்முகா நதி அணை உள்ளது. இப்பகுதி நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 7 மலைக்கிராமங்களில் மழை பெய்யும்போது, இந்த அணைக்கு நீர்வரத்து ஏற்படும். அணையில் நீர்நிரம்பியவுடன் இப்பகுதியில் உள்ள சுமார் 50 கி.மீ தூரமுள்ள கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இவ்வாறு தண்ணீர் திறக்கப்படும்போது, சுற்றுப்புற கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்துக்கு பயன்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால், நீர்வரத்து ஏற்பட்டு அணை நிரம்பியது. நீர்மட்டம் மொத்த உயரமான 52.55 அடியை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை நம்பி சுற்றுப்புற விளைநிலங்களில் சாகுபடி செய்தனர்.  இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஹைவேவிஸ், மேல்மணலாறு, இரவங்கலாறு உள்ளிட்ட ஏழு ஊர்களில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து சுத்தமாக இல்லை. அணையின் தற்போதைய நீர்மட்டம் 45.3 அடியாக உள்ளது. தொடர் மழை இல்லாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Stories: