திருப்போரூரில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உப்பு உற்பத்தி: 500 ஏக்கரில் ஆண்டுக்கு 25 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு தயாரிக்க முடிவு

திருப்போரூர், ஏப்.12 : சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் கேளம்பாக்கம், கோவளம், தையூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளிலும், செய்யூர், மரக்காணம் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் கேளம்பாக்கம் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலம் மத்திய அரசின் உப்பு வாரியத்திற்கு சொந்தமான நிலமாகும். இங்கு உப்பு உற்பத்தி தற்போதும் நடைபெற்று வருகிறது. திருப்போரூர் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. திருப்போரூர், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கூத்தவாக்கம், பையனூர், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தனியார் உப்பு தயாரிப்பு நிறுவனம் நீண்டகால குத்தகை அடிப்படையில் உப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த குத்தகை, கடந்த 2001ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. குத்தகையை நீட்டிக்க தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு அரசு நிலத்தை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உப்பு தயாரிப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும், தனியார் நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உப்பளம் நிலம் காலியாக கிடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனமே நேரடியாக உப்பு தயாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து முதற்கட்டமாக 500 ஏக்கர் நிலம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. உப்பு தயாரிக்கத் தேவைப்படும் பாத்தி அமைத்தல், குளம் மற்றும் கால்வாய் வெட்டுதல் போன்ற பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஒரு மாத காலத்தில் முடிவடையும் என்று தெரிகிறது.

உப்பு தயாரிப்பிற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் மூலமும், பக்கிங்காம் கால்வாயில் வரும் கடல்நீர் மூலமும் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 500 ஏக்கர் நிலத்தில் 1 வருடத்திற்கு 25000 மெட்ரிக் டன் உப்பு தயாரிக்க முடியும் என்றும் இவற்றில் உற்பத்தியாகும் உப்பின் தன்மையை பொறுத்து அவற்றில் பெரும்பான்மை யானவை உரத்தயாரிப்பிற்கும், மீதமுள்ளவை சாப்பாட்டு உப்பிற்கும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முழுமையாக மனித உழைப்பின் மூலமே உப்பு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், தற்போது 50 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம்

உப்பு தயாரித்து வந்த தனியார் நிறுவனம் குத்தகை முடிந்த நிலையில் இந்த 3000 ஏக்கர் நிலத்தை அப்படியே விமான நிலையமாக மாற்ற கடந்த 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. மொத்தமும் அரசு நிலம் என்பதாலும், தனியாரிடம் நிலம் கையகப்படுத்தல், இழப்பீடு தருதல் போன்ற சிக்கல்கள் எழாது என்றும், சென்னையை ஒட்டி 45 கி.மீ தூரத்தில் இருப்பதால் போக்குவரத்திற்கும் எளிதாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், மண் தரப் பரிசோதனையில் தோல்வி ஏற்பட்டது. மேலும், இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால் கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பில் சிக்கல் ஏற்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததாலும் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: