கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பரபரப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வளாகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேரூராட்சி முழுவதும் காலை முதல் மாலை வரை தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும்  அதிகரித்து வருவதால்,  துப்புரவு தொழிலாளர்களுக்கு    கையுறை, காலணிகள், பாதுகாப்பு கவசம், கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களை மரியாதையாக  நடத்த வேண்டும் என  பேரூராட்சி செயல் அலுவலரை வலியுறுத்தியும்  பேரூராட்சி அலுவலகம் முன்   நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து பேரூராட்சி  செயல் அலுவலர் முனுசாமி  தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில்  கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள்  உடனடியாக  வழங்கப்படும். தொழிலாளர்கள் உரிய  மரியாதை வழங்கப்படும் என்ற உறுதி ஏற்று   அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு  திரும்பிச் சென்றனர்.

Related Stories: