மாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உண்ண உணவின்றியும், சரியான முறையில் உடை உடுத்தாமலும் மனநோயாளிகள் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாக மாமல்லபுரம் அமைந்துள்ளது. கோயில் நகரமாகவும் திகழ்ந்து வரும் இங்கு ஆண்டுதோறும் உள்நாடு, வெளிநாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் வந்து, இங்குள்ள புராதன சின்னங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளை இங்கு கொண்டுவந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால், மாமல்லபுரம் பகுதியில் சுற்றித் திரியும் மனநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

 பொதுவாக இந்த சமூகம் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது. ஆனால், மன நோயாளிகளை மட்டும் ஏற்க மறுக்கிறது. உடன் பிறந்த உறவுகளே இவர்களை கவுரவ பிரச்னையாக கருதுகிறார்கள். மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் மனநோய் ஏற்படுகிறது. இதனை கடவுளின் சாபம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் என வதந்திகளை பரப்பில், மனநோயாளிகளை மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் கொண்டு வந்து விடும் கலாசாரம் இன்றும் தொடர்கிறது. இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலா தலமாக திகழும் மாமல்லபுரத்தில் சமீபகாலமாக மன நோயாளிகள் வருவது அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாளானோர் தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, ஒடிசா, பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில், வழிதவறி வந்தவர்களைவிட, சுற்றுலாவுக்கு வருவதுபோல் அழைத்து வந்து உறவுகளால் தெரிந்தே விட்டு செல்பவர்கள் அதிகம்.

தமிழகத்தில் மனநோயாளிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. ஆனால், மாமல்லபுரத்தில் சரியான உணவு, தங்குமிடம் கிடைக்காமல் மழையில் நனைந்து, வெயிலில் காய்கின்றனர். மேலும், இவர்களை மீட்கவும், இவர்கள் வருவதை தடுக்கவும், அரசு சார்பில் நடவடிக்கை எடுக்காததால், மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘எல்லா மனநோயும் தீர்க்கப்படக்கூடியதுதான். இதுவும் ஒரு வியாதி என்பதை உணராதவர்கள் இதை தீர்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். தொடர்ந்து மனநோயாளிகள் 2 அல்லது 3 ஆண்டுகள் மருந்து எடுத்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் நடுத்தர, ஏழை குடும்பங்கள் தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களிடம் போதுமான விழிப்புணர்வும் இல்லை. இதனால், குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதியை, குணப்படுத்த முடியாததாகவே மாற்றி விடுகின்றனர். மன நோயாளிகளை கண்டால் அவர்களை அருகில் உள்ள மன நல மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும். கடந்த  2001ல் ஏர்வாடி மனநல காப்பகத்தில் தீ விபத்து நடந்தது. அதன்பிறகு, மனநலத் துறையில் மனநோயாளிகளை காக்க எல்லா மாவட்டத்திலும் மனநல மருத்துவர்களையும், மனநல மருத்துவமனைகளையும் உருவாக்கினர். எனவே, மாமல்லபுரத்தில் சுற்றித்திரியும் மன நோயாளிகளை மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ மீட்டு உரிய சிகிச்சையளிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: