குடியிருப்பில் கொரோனா வார்டுக்கு எதிர்ப்பு மனை ஒதுக்கீடு ஆணையை ஒப்படைத்து காத்திருப்பு போராட்டம்

அம்பத்தூர், ஏப்.9: அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு, கலைவாணர் நகரில் 19அடுக்கு மாடிகளைக் கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 11 பிளாக்குகளில் 2394 வீடுகள் உள்ளன. இங்குள்ள 5பிளாக்குகளை மட்டும் வீட்டு வசதி வாரிய விற்பனை செய்து உள்ளது. இதில் உள்ள வீடுகளில் 822 பேர் வசிக்கின்றனர். மீதி உள்ள 6 பிளாக்குகளில் வீடுகள் காலியாக உள்ளன. இதற்கிடையில், கடந்த 22ம் தேதி காலியாக உள்ள வீடுகளில் கொரோனா தொற்று நோய்க்கான வார்டுகளை சுகாதார துறை அதிகாரிகள் அமைத்தனர். மேலும், பல்வேறு இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட 500க்கு மேற்பட்ட நோயாளிகளை ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால், குடியிருப்போர் அனைவரும் கொரோனா தொற்றுநோய் வார்டு அமைத்தற்கு, வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்கள் காலியாக உள்ள வீடுகளை மாநகராட்சி நிர்வாகத்தில் வாடகைக்கு ஒப்படைத்து விட்டோம் என கூறி விட்டு நழுவி சென்றனர். இதனையடுத்து, கடந்த 23ம் தேதி குடியிருப்போர் திரண்டு வந்து வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அடுத்து, அவர்களுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் குடியிருப்பில் உள்ள தொற்று நோய்க்கான வார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.

இதையடுத்து, போலீசார் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர். பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த சென்றனர். இருந்த போதிலும் குடியிருப்புகளில் தொடர்ந்து தொற்று நோய்க்கான நோயாளிகள் அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கடந்த 28ந்தேதி வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வெளியே திரண்டு வந்தனர். பின்னர், குடியிருப்பு வளாகம் முன்பு அனைத்து பொருட்களை போட்டு வீடுகளை காலி செய்ய போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். மேலும், குடியிருப்போர் 3மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நடத்தினர். இருந்த போதிலும் அதிகாரிகள் யாரும் அங்கு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனையடுத்து, வீட்டு உரிமையாளர்கள் அங்கிருந்து பொருள்களுடன் குடியிருப்பை காலி செய்து வெளியே செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அவர்களுக்கும், போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பிறகு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனாலும் கொரோனா வார்டு அகற்றப்படவில்லை. இதற்கிடையில், குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை 10மணி அளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர், அவர்கள் கோயம்பேட்டில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் பிறகு, அவர்கள் தங்களுக்கு வழங்கிய வீட்டுமனை ஒதுக்கீட்டு ஆணையை தலைமை செயற்பொறியாளர் கண்ணனிடம் ஒப்படைத்து வீடுகளை காலி செய்வதாக கடிதம் அளித்தனர். மேலும், அவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப தருமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, அதிகாரிகள் உங்கள் பிரச்சனையை மாநகராட்சி உயரதிகாரிகள், வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரிகள் கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர்கள் அங்கேயே தொடர்ந்து காத்திருந்தனர். பின்னர், அதிகாரிகள் நாளை (இன்று) மாநகராட்சி, வீட்டு வசதி வாரியம், குடியிருப்போர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து கொள்ளலாம் என கூறினர். இதனையடுத்து, வீட்டு உரிமையாளர்கள் காத்து இருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து நேற்று மாலை 3 மணி அளவில் கலைந்து சென்றனர்.

Related Stories: